Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
பேறடைவு
pēṟaṭaivu
இறைவரவு இயம்பல்
iṟaivaravu iyampal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
101. உய்வகை கூறல்
uyvakai kūṟal
கலிநிலைத் துறை
திருச்சிற்றம்பலம்
1.
அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
2.
வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
3.
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
4.
நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
5.
துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
6.
ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
7.
வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.
8.
சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
9.
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
10.
கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
11.
கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
12.
அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
355. அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் // உய்வகை கூறல்
No audios found!
Oct,12/2014: please check back again.